திருப்பூர்: இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

திருப்பூரில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பூர்: இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
Published on

திருப்பூர்,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக எடுத்து சென்று குளங்களில் விசர்ஜனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சி(தமிழ்நாடு), இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா), சிவசேனா, தமிழ் மாநில சிவசேனா, பாரத அன்னையர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது.

ஊத்துக்குளி ரோடு மண்ணரை, பாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலைகள் யூனியன் மில் ரோடு சக்தி தியேட்டர் அருகில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு சிவசேனா, யுவசேனா அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் திருமுருக தினேஷ், சிவசேனா மாநில துணைத்தலைவர் போஸ், இந்து அதிரடிப்படை நிறுவன தலைவர் ராஜகுருஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதையடுத்து விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

இதுபோல இந்து முன்னேற்ற கழகம், விசுவ இந்து பரிஷத்(தமிழ்நாடு), அந்தாராஷ்ரா இந்து பரிஷத், ராஸ்டிரிய பஜ்ரங்தள், கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் பூ கட்டுவோர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட விநாயகர் சிலைகள் நடராஜா தியேட்டர் ரோடு ஆலங்காடு பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து முன்னேற்ற கழகம் சார்பில் தனித்தனியாக அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்து முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத், மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன், கோவை மண்டல தலைவர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து அங்கு வாகனங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக பக்தர்களின் கோஷங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன்படி திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு அமைப்புகள் சார்பில் 73 சிலைகள் நேற்று விஜர்சனம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com