பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
Published on

பட்டா மாற்றம்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த மேலகொண்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் தனது தாத்தா நாராயணரெட்டி பெயரில் உள்ள ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தை தனது தந்தை வாசுதேவன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து அவரது விண்ணப்பம் வருவாய் துறைக்கு ஆன்லைன் வழியாக வந்துள்ளது. இதையடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மேலகொண்டையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்த கிராம நிர்வாக அதிகாரி சர்வேஸ்வரி (39) என்பவரை கோபால் அணுகியுள்ளார்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

அப்போது சர்வேஸ்வரி பட்டா மாற்றம் விண்ணப்ப மனுவை மேல் நடவடிக்கைக்கு அனுப்புவதற்காக கோபாலிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பணம் கொடுத்தால் தான் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு பரிந்துரை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கூலித்தொழிலாளியான கோபால் சர்வேஸ்வரி மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து சர்வேஸ்வரியை கையும், களவுமாக பிடிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று மேலகொண்டையூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே மறைந்திருந்தனர்.

கிராம நிர்வாக அதிகாரி கைது

அதன் பின்னர் கோபாலிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டை கொடுத்து அனுப்பினர். இதைத்தொடர்ந்து, கோபால் பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சர்வேஸ்வரியை பிடித்து கைது செய்தனர். லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சர்வேஸ்வரி சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், மேலகொண்டையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக 4 மாதமாக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com