திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ‘கஜா’ புயல் நிவாரண பணிக்காக 100 பணியாளர்கள் பயணம் கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தில் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 100 பணியாளர்களை கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ‘கஜா’ புயல் நிவாரண பணிக்காக 100 பணியாளர்கள் பயணம் கலெக்டர் வழியனுப்பி வைத்தார்
Published on

திருவள்ளூர்,

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. மரங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சாய்ந்து விழுந்து உள்ளன. வீடுகளும் சேதம் அடைந்து உள்ளன.

பொதுமக்கள் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு உத்தரவின்பேரில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பணிக்காக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 100 பணியாளர்கள் மற்றும் சாலையில் சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்ற மின்அறுவை எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை லாரி மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி உபகரணங்களுடன் பணியாளர்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழி அனுப்பி வைத்தார்.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறும்போது, புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தில் நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 100 பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தேவைப்பட்டால் மேலும் பணியாளர்களை அனுப்பி வைக்க தயாராக உள்ளோம் என்றார்.

அப்போது திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் முருகேசன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், நகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com