அனைத்து ஊர்களிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஊரடங்கில் சலூன் கடைகள் திறக்கப்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஊர்களிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அனைத்து ஊர்களிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் - முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
Published on

வேலூர்,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் கணபதி மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கின்போது சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 55 நாட்களாக சலூன் கடைகளை அடைத்து அரசு உத்தரவிற்கு முழுஒத்துழைப்பு அளித்து வீட்டிற்குள் முடங்கி உள்ளோம். கடைகளை திறக்காததால் தொழில் மூலமாக வரும் பொருளாதாரத்தை இழந்துள்ளோம்.

அதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 4-ம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசின் உத்தரவில் சலூன் கடைகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசு வருகிற 31-ந் தேதி வரை சலூன் கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றும், தற்போது காணப்படும் தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 50 நாட்களுக்கு மேலாக பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வரும் எங்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதனை தவிர்க்க சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.

அனைத்து ஊர்களிலும் குறைந்த பட்சமாக கடைகளை பகுதி நேரமாக திறக்க அனுமதி வழங்க வேண்டும். முடிதிருத்தும் நபர்கள் கையுறை, முக கவசம் அணிந்து பணியாற்றி கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். எங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க சலூன் கடைகளை திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com