குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சட்டசபையை முற்றுகை 150 பேர் கைது

போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சட்டசபையை முற்றுகை 150 பேர் கைது
Published on

புதுச்சேரி,

புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் மற்றவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரான சந்துருஜி உள்பட மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் சட்டசபையை முற்றுகையிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்திருந்தன.

அதன்படி இந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் நேற்று நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பில் கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் அட்டையால் வடிவமைக்கப்பட்டு இருந்த ஏ.டி.எம். எந்திரத்தின் மாதிரியை எடுத்து வந்தனர். ஊர்வலத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஊர்வலத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் அபிசேகம், சேதுசெல்வம், துரைசெல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் பெருமாள், ராஜாங்கம், ராமச்சந்திரன், சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுப்புக் கட்டைகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஊர்வலமாக வந்தவர்கள் அரசுக்கும், போலீசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது சிலர் தடுப்பு கட்டைகளின் மீது ஏறினார்கள். அவர்களை தடுத்ததால் முற்றுகையிட வந்தவர்களுக்கும், போலீசாருக்கும், இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com