காங்கிரசுக்கு முனிரத்னா துரோகம் செய்துவிட்டார் ஆர்.ஆர்.நகருக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன் இடைத்தேர்தல் பிரசாரத்தில் - சித்தராமையா பேச்சு

ஆர்.ஆர்.நகருக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன் என்றும், காங்கிரசுக்கு முனிரத்னா துரோகம் செய்துவிட்டதாகவும் சித்தராமையா கூறியுள்ளார்.
காங்கிரசுக்கு முனிரத்னா துரோகம் செய்துவிட்டார் ஆர்.ஆர்.நகருக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன் இடைத்தேர்தல் பிரசாரத்தில் - சித்தராமையா பேச்சு
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் (ஆர்.ஆர்.நகர்) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பிரசாரம் செய்தார். அவர் ஜாலஹள்ளி, பீனியா உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினார். அப்போது சித்தராமையா பேசியதாவது:-

தனது எதிரிகளை மிரட்டி எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என்று முனிரத்னா கருதினால், அவரை போன்ற முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. போலீசார் நேர்மையான முறையில் நடுநிலையாக பணியாற்ற வேண்டும். பா.ஜனதா ஆட்சி இருக்கிறது என்ற காரணத்தால் அக்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது நல்லதல்ல. அத்தகைய போலீசார் வரும் காலத்தில் கடினமான நாட்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

முனிரத்னா 2 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக காங்கிரசே காரணம். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, இந்த ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன். ஆனாலும் காங்கிரசுக்கு அவர் துரோகம் செய்துவிட்டு சென்றார். அவருக்கு நாங்கள் என்ன அநியாயம் செய்தோம்?. முனிரத்னா, காங்கிரஸ் தனது தாய்க்கு சமமான கட்சி என்று கூறினார். அத்தகைய தாய்க்கு துரோகம் செய்துவிட்டு அவர் வேறு கட்சிக்கு சென்றுள்ளார்.

இப்போது காங்கிரஸ் கட்சியினர் தனது தாயை அவமதிக்கிறார்கள் என்று அவர் முதலை கண்ணீர் வடிக்கிறார். சொந்த நலனுக்காக அவர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். இத்தகையவர்கள் அரசியல் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள். அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும். முனிரத்னா எப்போதுளீ; அச்சுறுத்தும் அரசியலை செய்கிறார். தனக்காக உழைத்தவர்கள் மீது கூட வழக்குகளை போடுவது அவரது பழக்கம். இந்த தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் மூலம் அவர் வழக்குகளை போட்டுள்ளார்.

மோடி மோடி என்று கூவும் இளைஞர்களுக்கு மோடி மூன்று நாமம் போட்டுள்ளார். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் உறுதியளித்தார். ஆனால் தற்போது இருக்கின்ற வேலைகளை இழந்து இளைஞர்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று பிரதமர் சொல்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தது. இப்போது எடியூரப்பா ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இத்தகைய அரசுக்கு இடைத்தேர்தல் முடிவு ஒரு எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும். பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த பிரசாரத்தின்போது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com