

புதுச்சேரி,
கொரோனா 2-வது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா மையங்களை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றை விரட்டியடிக்க அரசு ஊரடங்கு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கையாண்ட போதும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை.
இதைத்தொடர்ந்து மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனையை அதிகப்படுத்தி உள்ளனர். புதுவையில் இருந்து கடலூர், விழுப்புரம் மாவட்டத்துக்கும், அங்கிருந்து புதுவைக்குள்ளும் மக்கள் நுழைவதை கட்டுப் படுத்தும் வகையில் மாநில எல்லையான மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம், கோரிமேடு, முள்ளோடை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், கொரோனா விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.