நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது

மராட்டியத்தில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது
Published on

மும்பை,

சீனாவில் உருவாகி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 739 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல மாநிலத்தில் மேலும் 120 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 969 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் 4-வது நாளாக ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை மாநிலத்தில் 37 ஆயிரத்து 390 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். தற்போது 42 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் நேற்று புதிதாக 1,274 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்து 354 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல நகரில் புதிதாக 58 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை வைரஸ் நோய்க்கு மும்பையில் 1,577 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 4,710 (120 பேர் பலி), தானே புறநகர் - 1,65 (21), நவிமும்பை மாநகராட்சி - 3,357 (86), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 1,698 (34), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 485 (15), பிவண்டி மாநகராட்சி - 247 (11), மிரா பயந்தர் மாநகராட்சி - 902 (35), வசாய் விரார் மாநகராட்சி -1,194 (34), ராய்காட் - 722 (29),

பன்வெல் மாநகராட்சி - 689 (26). மாலேகாவ் மாநகராட்சி - 782 (68). புனே மாநகராட்சி - 8,049 (372), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 617 (13), சோலாப்பூர் மாநகராட்சி - 1,176 (90), அவுரங்காபாத் மாநகராட்சி - 1,815 (90), நாக்பூர் மாநகராட்சி - 690 (11).

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com