பணி நிரந்தரம் செய்யக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 37 பேர் கைது

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 37 பேர் கைது
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாவட்டம் முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் பணிக்கு வராததால், மின் வினியோகம் பாதிப்பு தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சரிசெய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதனால் சில பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில், கடந்த 1998-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்கிட வேண்டும், 2008-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊட்டி ஆவின் பகுதியில் உள்ள நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தலைவர் ராமன், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடுங்குளிர் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் பணிபுரிந்து வரும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு கேங் மேன் பதவியில் தேர்வுகள் இல்லாமல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக ஊட்டி-குன்னூர் சாலை ஆவின் பகுதியில் ஒப்பந்த தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசிடம் அனுமதி பெறவில்லை.

இதனால் ஊட்டி நகர மத்திய போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 37 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வேனில் ஏற்றி தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com