ஆறுகளில் சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் தீர்மானம்

ஆறுகளில் சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆறுகளில் சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் தீர்மானம்
Published on

ஈரோடு,

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் கே.வெங்கடாசலம் தலைமை தாங்கிபேசினார். மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி உழவர் தின தியாகிகள் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் கடன் விடுதலை மாநாட்டை ஈரோட்டில் நடத்துவது. தென்பெண்ணை ஆறு உபரி நீரை மார்க்கண்டேய ஆற்றில் திருப்பி படேயதல கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாய தோட்டங்களில் புகுந்து சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதிக்க வேண்டும்.

பாண்டியாறு-மாயாறு, ஆனைமலை ஆறு-நல்லாறு ஆகிய திட்டங்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு 100 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். மலைவாழ் மக்கள் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு பட்டாவும், பயிருக்கான காப்பீடும் அரசு வழங்க வேண்டும். பல மடங்கு உயர்ந்து உள்ள உரவிலையை குறைக்க வேண்டும். கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெயராஜ், செயலாளர் கிருஷ்ணன், நிர்வாகிகள் கந்தசாமி, ஜெகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com