குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. என்ற புதிய அமைப்பு

குடியரசு தின விழாவை சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ. என்ற புதிய அமைப்பை உருவாக்கியதாக சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. என்ற புதிய அமைப்பு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோடு சோதனைச்சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) என்பவர் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோடு அடப்புவிளை பதார் தெருவைச் சேர்ந்த அப்துல் சமீம் (29), நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார் நகர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

தற்போது கோர்ட்டு உத்தரவின் பேரில் 10 நாள் போலீஸ் காவலில் இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை பயங்கரவாதிகள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சாக்கடை கால்வாயில் வீசியதாக கூறினர். மேலும் அந்த இடத்தையும் அவர்கள் அடையாளம் காட்டினர். இதனையடுத்து கால்வாயில் கிடந்த துப்பாக்கியை போலீசார் நேற்றுமுன்தினம் மீட்டனர். மேலும் அதில் இருந்த 5 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கொலைக்கு பயன்படுத்திய வெட்டுக் கத்தியை திருவனந்தபுரத்தில் வீசியதாக தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் மீண்டும் திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தம்பானூரில் உள்ள திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள காலிமனை பகுதியில் கொலைக்கு பயன்படுத்திய வெட்டுக் கத்தியை வீசியதாக அப்துல் சமீம் அடையாளம் காட்டினார். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் வெட்டு கத்தியை தேடினர். காலை 10.30 மணிக்கு அந்த கத்தியை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் அப்துல் சமீமும், தவுபிக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் வெட்டுக்கத்தி வாங்கிய கடையையும் அடையாளம் காட்டினர். மேலும் கத்தி வாங்கியதற்கான ரசீதையும் போலீசார் அந்த கடையில் இருந்து கைப்பற்றினர். கொலைக்கு முன்பு பயங்கரவாதிகள் 2 பேரும், துணிமணிகளை வைப்பதற்கு பயன்படுத்திய கைப்பை ஒன்றை நெய்யாற்றின்கரையில் உள்ள பள்ளிவாசலில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் கொடுத்துள்ளனர். கொலை நடந்த பிறகு தான் தன்னிடம் கைப்பையை கொடுத்துச் சென்றவர்கள் வில்சனை கொலை செய்தவர்கள் என்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பயந்து போன அவர் பயங்கரவாதிகள் கொடுத்த கைப்பை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்தார். விசாரணை மூலம் தெரிந்த போலீசார், பயங்கரவாதிகள் இருவரையும் பள்ளிவாசலில் பணிபுரியும் ஊழியர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்கள் கொடுத்த கைப்பையை கைப்பற்றினர்.

இதையடுத்து 2 பேரையும் நாகர்கோவிலில் உள்ள நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பயங்கரவாதி அப்துல் சமீமின் தலைவனான கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீனுக்கு வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவலை அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது காஜாமொய்தீனை தலைவராக கொண்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை உள்ளடக்கிய பிரிவினர் ஐ.எஸ்.ஐ. (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இந்தியா) என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் குடியரசு தினத்தன்று தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

ஆனால் தங்களது சதிச்செயலை அரங்கேற்ற விடாமல் மத்திய உளவுத்துறை கொடுத்த தகவலின்பேரில் போலீசார் டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த தங்களது அமைப்பினரை தொடர்ச்சியாக கைது செய்ததால் போலீசாரை அச்சுறுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்துள்ளனர். கொலை செய்த பிறகு, இந்த கொலையை தங்களது அமைப்பினர்தான் செய்தோம் என்பதை போலீசுக்கு தெரிவிக்கும் நோக்கில் ஒரு தாளில் ஐ.எஸ்.ஐ. என்ற தங்களது அமைப்பின் பெயரை எழுதி வில்சனின் உடல் அருகே வீசி விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதே போன்று எழுதப்பட்ட தாள்களை போலீசார் கைப்பற்றி இருப்பதாகவும் தெரிகிறது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com