வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கரூர் உழவர் சந்தையில் துண்டு பிரசுரம் வினியோகம்

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கரூர் உழவர் சந்தையில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கரூர் உழவர் சந்தையில் துண்டு பிரசுரம் வினியோகம்
Published on

கரூர்,

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, கரூர் உழவர் சந்தையில் நேற்று நடந்தது. அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் உள்பட அதிகாரிகள், உழவர் சந்தையில் காய்கறி விற்பவர்கள் மற்றும் பொருட்களை வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் ஆகியோரிடம் துண்டு பிரசுரத்தை வினியோகித்து வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும், தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதன் முறையாக யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான வி.வி.பேட் எந்திரத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது பொதுமக்கள் சிலர் அந்த துண்டு பிரசுரங்களை வாங்கிப்படித்து அதில் உள்ள தகவல்கள் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்களுக்கு, அதிகாரிகள் அவர்களின் குழந்தைகளின் கையிலேயே துண்டுபிரசுரங்களை வழங்கி அவர்களையே பெற்றோரிடம் கொடுக்க செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த ஆட்டோக்கள், ஏ.டி.எம். மையங்கள், உழவர் சந்தை கடைகள் என அனைத்துப்பக்கங்களிலும் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை மாவட்ட வருவாய் அதிகாரி ஒட்டினார். அப்போது வட்டாட்சியர்கள் பிரபு(கரூர்), ரவிக்குமார்(மண்மங்கலம்) உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com