தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கவிதா, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பயனடைய தேவையான திட்ட நடவடிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்க வேண்டும். பருவமழை தீவிரமடைந்தால் அதன் மூலம் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். பருவமழை காலங்களில் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலைகள், பொது இடங்களில் மழைநீர் தேங்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி தென்படுபவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும்.

மழைக்காலங்களில் ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களை கண்காணித்து வெள்ளம் வரும் காலங்களில் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தென்மேற்கு பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளி கட்டிடங்களை பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்சார துறையினர் மழைநீர் சூழ்ந்து நீர்வடியாமல் இருக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பலத்த காற்று மற்றும் மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதை சரி செய்ய தேவையான பணியாளர் குழுக்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com