கணவரின் பணப்பலன்களை பெற 2-வது மனைவிக்கு உரிமை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு

இறந்த கணவரின் பணப்பலன்களை பெற 2-வது மனைவிக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பு கூறிய மும்பை ஐகோர்ட்டு, இரண்டு மனைவியின் குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்று உத்தரவிட்டது.
கணவரின் பணப்பலன்களை பெற 2-வது மனைவிக்கு உரிமை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு
Published on

மும்பை,

மராட்டிய ரெயில்வே போலீசில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் சுரேஷ் ஹதங்கர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மே 30-ந் தேதி உயிரிழந்தார். கொரோனா காரணமாக உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.65 லட்சம் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிவாரணத்தை பெற சுரேஷ் ஹதங்கரின் இரண்டு மனைவிகளும் விண்ணப்பித்தனர். இந்தநிலையில் அவரின் 2-வது மனைவியின் மகளான ஷரத்தா மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தார். அதில், வீடு மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் தாயை காப்பாற்ற தனது தந்தையின் பணப்பலன்களில் இருந்து சரிசமமான தொகையை தங்களுக்கு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

ஆனால் சுரேஷ் ஹதங்கருக்கு 2-வது மனைவி இருப்பது தங்களுக்கு தெரியாது என்று முதல் மனைவி குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கு 2-வது மனைவி குடும்பத்தினர் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அதில், உயிரிழந்த கணவரின் பணப்பலன்களை பெற முதல் மனைவிக்கு தான் உரிமை உண்டு. 2-வது மனைவிக்கு உரிமை இல்லை. ஆனால் கணவரின் இரண்டு மனைவிகள் மூலமும் பிறந்த குழந்தைகளுக்கு பணப்பலன்களை பெற உரிமை உண்டு என்று தீர்ப்பில் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com