‘முன்னாள் படைவீரர் குடும்பங்களுக்கு உதவ கொடிநாள் நிதி வழங்குங்கள்’

“முன்னாள் படைவீரர் குடும்பங்களுக்கு உதவ கொடி நாள் நிதி வழங்குங்கள்’ என்று கோவை மக்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘முன்னாள் படைவீரர் குடும்பங்களுக்கு உதவ கொடிநாள் நிதி வழங்குங்கள்’
Published on

கோவை,

இந்திய கொடி நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் நிதிவசூல் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அதற்கான உண்டியலில் அவர் நிதி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய நாட்டின் முப்படை வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூரும் வகையில் நாடு முழுவதும் டிசம்பர் 7-ம் நாள் கொடி நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டம் படைவீரர் கொடிநாள் நிதி வசூலில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கினை தாண்டி நிதிவசூல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டுக்கு சேவை செய்ய இளம் ஆண், பெண்களை ராணுவத்துக்கு அனுப்பி வைக்கும் பழக்கம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ள மரபாகும்.

நமது இளைஞர்கள் மத்தியில் வீரத்தை விதைத்து, ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்கச் செல்லும் வீரர்களின் குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதும், போரில் மரணமடைந்த வீரர்களின் வாரிசுகள், குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்கும், படைப்பணியிலிருந்து விடுவிக்கப்படும் ராணுவ வீரருக்கு மறுவேலைவாய்ப்பு அளிப்பதற்கும் நம் அனைவரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

முன்னாள் படைவீரர்கள் ஊனமுற்ற படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் குடும்பத்தினருக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்களுக்காக, கொடி நாளில் திரட்டப்படும் நன்கொடைகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் வசூல் இலக்கைத் தாண்டி கோவை மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ரூ.82 லட்சத்து 51 ஆயிரம் கோவை மாவட்டத்திற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் நடப்பு(2017) ஆண்டிற்கான கொடிநாள் நிதியாக ரூ. 1 கோடியே 5 லட்சம் நிதி வசூல் செய்யப்பட்டது. இது கோவை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட 27.1 சதவீதம் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் படைவீரர் கொடி நாள் நிதிக்கு இலக்கினை விட கூடுதலாக வாரி வழங்கும் கோவை மக்களிடம் 2018-ம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.90 லட்சத்து 76 ஆயிரத்து 200-ஐ விட கூடுதலாக வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார்(தேர்தல்) மற்றும் பலர் உடன் இருந்தனர். கோவை மாநகர ஊர்க்காவல் படையின் கம்பெனி கமாண்டர் சாரதாமணி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு கொடிநாள் நிதி வசூலை கமிஷனர் பெரியய்யா நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com