விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நபார்டு வங்கியின் விவசாய உட்கட்டமைப்பு நிதி தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

பிரதம மந்திரி அறிவிப்புக்கு ஏற்ப, இந்திய அளவில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் விவசாய உட்கட்டமைப்பை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.5 ஆயிரத்து 990 கோடி நிதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியில் முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கடன் நிதியை பெறுவதற்கு விவசாய கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், விவசாய கூட்டுறவு உற்பத்தி குழுக்கள், சுயஉதவி குழுக்கள் போன்றவை தகுதியானவை ஆகும்.

இந்த திட்டத்தில் விவசாய பொருட்கள் விற்பனை தொடர்பான மின்னணு வர்த்தகங்கள், சேமிப்பு கிடங்குகள், பழங்களை பதப்படுத்தி வைக்கும் கிடங்குகள், போக்குவரத்து தளவாடங்கள், குளிர் பதன கிடங்குகள், இயற்கை விவசாயத்துக்கு தேவையான இடு பொருட்கள் உற்பத்தி செய்தல், நுண்ணூட்ட உயிரி உரங்கள் தயாரித்தல் உள்ளிட்டவை வேளாண்மை தொடர்பான தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு 3 சதவீதம் வரை வட்டி சலுகையுடன் 7 ஆண்டு கால அளவில் வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை www://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில் பெறலாம். இந்த திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை உயர்த்திட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரமணிதேவி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ராமலிங்கம், முன்னோடி வங்கி மேலாளர் யோகானந்த், மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com