

புதுச்சேரி,
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று புதுவை அண்ணா சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. நேற்று மாலை போராட்டத்தை நிறைவு செய்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் கண்டிப்பாக நிறைவு பெறாது. விவசாயிகள் தங்கள் கொள்கையில் உறுதியாக உள்ளனர்.
புதுவை மாநில விவசாயிகளுக்கு 4 ஆண்டுகளாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். கூட்டுறவு வங்கி கடன் ரூ.21 கோடியை தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் அனைவரும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் 48 பக்கம் விவசாயிகளுக்காக தான் உள்ளது. மத்திய அரசு புதுவையை பார்த்து விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் இங்கு வந்து பயிற்சி எடுத்துச் செல்ல வேண்டும்.
புதுவை மாநிலத்திற்கு விடிவுகாலம் வர வேண்டும் என்றால் ஒருவர் வெளியே செல்ல வேண்டும். அவர் சென்றால் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். அமைச்சரவையில் முடிவு செய்து அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கி கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி வைத்தால் அதனை கொடுக்க அவர் மறுக்கிறார். அதிகாரமே இல்லாத கவர்னர் சட்டசபையில் நிறைவேற்றிய திட்டங்களை மாற்ற முயற்சிக்கிறார். இது அதிகார துஷ்பிரயோகத்தின் கடைசி எல்லை.
சுற்றுலா வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினால் அதனை தடுக்கிறார். மேம்பாலம் கட்ட விடுவதில்லை. பஞ்சாலைகள், அரசு சார்பு நிறுவனங்களை மூடுவது தான் கவர்னரின் வேலையா? பிரதமரால் நியமிக்கப்பட்ட கவர்னர் புதுவைக்கு ஒரு பைசா கூட நிதி பெற்றுத் தரவில்லை. நம் மாநிலத்திற்கு பெரிய சாபக்கேடு கவர்னர் கிரண்பெடி. மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதால் மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து புதுவையை காப்பாற்ற வேண்டும்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பலமுறை முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பெடி, ரங்கசாமி யாராலும் ஆட்சியை அசைத்துப் பார்க்க முடியாது. அதற்கு நம் கூட்டணி கட்சிகளின் பலம் தான் காரணம். மத்திய அரசு புதுவை மாநிலத்தை தமிழகத்துடன் இணைக்கும் வேலையை செய்து வருகிறது. அதை செய்து விட்டால் புதுவையின் தனித்தன்மை போய் விடும். நாம் முனைப்பாக இருந்தால் தான் இதனை முறியடிக்க முடியும். அதற்காக உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று மாலை நிறைவு பெற்றது. இதை முடித்து வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிறைவுரையாற்றினார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நகலை கிழித்தெறிந்தார்.