கடனை அடைக்க பணம் தேவைப்பட்டதால் ‘யூடியூப்பை’ பார்த்து வழிப்பறி, திருட்டு இலங்கை வாலிபர் உள்பட 2 பேர் கைது

கடனை அடைக்க பணம் தேவைப்பட்டதால் ‘யூடியூப்’பை பார்த்து வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட இலங்கை வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடனை அடைக்க பணம் தேவைப்பட்டதால் ‘யூடியூப்பை’ பார்த்து வழிப்பறி, திருட்டு இலங்கை வாலிபர் உள்பட 2 பேர் கைது
Published on

ஆவடி,

ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டி உள்ளிட்டவர்களிடம் சங்கிலி பறிப்பு மற்றும் சுற்றியுள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதுபற்றி தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பட்டாபிராம் போலீசார், மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்த பிரதீப் (வயது 26) மற்றும் ஜெனுசன் (25) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள், மூதாட்டிகளிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், பூட்டிக்கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதும் தெரிந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 15 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் கைதான ஜெனுசன், இலங்கையை சேர்ந்தவர் என்பதும், 2009-ம் ஆண்டு தனது தாய், தந்தை, தம்பி, தங்கையுடன் இலங்கையில் இருந்து சென்னை வந்து படப்பை பகுதியில் தங்கி இருந்ததும், தற்போது அங்கு சொந்தமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி குடியிருப்பதும் தெரிந்தது.

இவரது தந்தை, ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். இந்த விலாசத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் வைத்திருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக ஜெனுசனிடம் கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். கடனை அடைக்க பணம் தேவைப்பட்டதால் யூ டியூப் சேனலை பார்த்து சங்கிலி பறிப்பு மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com