பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க விவசாயிகளிடம் சர்க்கரை கொள்முதல் - குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்க, திண்டுக்கல் விவசாயிகளிடம் நேரடியாக வாழைப்பழம், சர்க்கரை கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க விவசாயிகளிடம் சர்க்கரை கொள்முதல் - குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, வேளாண்மை இணை இயக்குனர் பாண்டித்துரை மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

கன்னிவாடி அருகே நாயோடை அணை 41 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் 10 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆனால், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி குடிமராமத்து பணி செய்யவில்லை. ரூ.2 லட்சம் அளவுக்கு மட்டுமே செலவு செய்து விட்டு, ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

பிரதமரின் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளில் பலருக்கு இதுவரை உதவித்தொகை வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளை கேட்டால், 2 தவணை தொகை செலுத்தப்பட்டதாக கூறுகின்றனர். குஜிலியம்பாறை பகுதியில் விவசாயிகள் வறட்சியால் தவிப்பதால், ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டும்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம் மலையடிவாரம் வழியாக வேடசந்தூர், நத்தம் வரை கால்வாய் அமைக்க வேண்டும். இதனால் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்கலாம். மேலும் வேடசந்தூர், நத்தம் பகுதிகளில் விவசாயம் செழிக்கும். நிலக்கோட்டையில் விடுபட்ட விவசாயிகளுக்கு கஜா புயல் நிவாரணம் வழங்க வேண்டும்.

பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு வெளிமாநிலத்தில் சர்க்கரை வாங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கரும்பு, வாழை அதிகமாக பயிரிடப்படுகிறது. எனவே, பஞ்சாமிர்தம் தயாரிக்க தேவையான வாழைப்பழம், சர்க்கரையை இங்குள்ள விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசுகையில், குடிமராமத்து பணி முழுவதும் விவசாயிகள் தான் மேற்கொள்கிறார்கள். இதற்காக விவசாயிகளை அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறோம். எனவே, பணி நடைபெறும் போது விவசாயிகள் கவனிக்க வேண்டும். மேலும் நாயோடை அணையில் நடைபெறும் குடிமராமத்து பணி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாமிர்தத்துக்கு வாழைப்பழம், சர்க்கரை கொள்முதல் செய்வது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், பிரதமர் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து இதுவரை உதவித்தொகை பெறாதவர்கள், ஆதார் எண், சர்வே எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களுடன் மனு கொடுத்தால் சரிபார்க்கப்படும். அதேபோல் புதிதாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து அந்த பகுதியில் உள்ள குளங்களுக்கு தேவையான தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com