உணவு தானியங்களை பாதுகாக்க விவசாயிகள் சேமிப்பு கிடங்கை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

விவசாயிகள், தங்களுடைய உணவு தானியங்களை பாதுகாத்து வைக்க சேமிப்பு கிடங்கை பயன்படுத்தவேண்டும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
உணவு தானியங்களை பாதுகாக்க விவசாயிகள் சேமிப்பு கிடங்கை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
Published on

நெல்லை,

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் உணவு தானியங்களை பாதுகாக்கும் முறை மற்றும் அறுவடைக்கு பின் உணவு தானியங்களை சேமிக்கும் முறை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சேமிப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, விளைப்பொருட்களின் சேமிப்பில் ஏற்படும் இழப்பினை குறைப்பதற்காக தொடங்கப்பட்டது தான் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்.

இந்த நிறுவனம் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு வங்கிகளிடமிருந்து கடன் வசதிகள் பெறுவதற்கு ஏதுவாக, மாற்றத்தக்க சேமிப்பு கிடங்கு ரசீதுகளை வழங்கி வருகிறது. விவசாயிகள், சேமிப்பு வைப்பவர்கள் இந்த ரசீதுகள் மூலம் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைத்துள்ள விவசாய பொருட்களின் மீது 50 முதல் 70 சதவீதம் வரை 7 முதல் 10.05 சதவீதம் ஆண்டு வட்டியில், வங்கிகள் மூலம் கடன் பெற்று வருகின்றனர்.

கடந்த 2 வருடங்களாக அறுவடைக்குப்பின் விவசாய விளைப்பொருட்களை நோய் தாக்கமின்றி பராமரித்து குறித்த விழிப்புணர்வு பயிற்சியினை சேமிப்பு கிடங்கு பணியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

இந்த பயிற்சி முகாமில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு தலா 50 விவசாயிகள் என 4 மாவட்டத்திற்கு 200 விவசாயிகளுக்கு தலா ரூ.1,500-மதிப்புள்ள விசைத் தெளிப்பான்கள் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தி தங்களுடைய உணவு தானியங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்யஜோஸ், வேளாண்மை துணை இயக்குநர் சரஸ்வதி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன முதுநிலை மண்டல மேலாளர் அலாவூதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com