தொப்பூர் கணவாயில் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தல்

தொப்பூர் கணவாயில் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தினார்.
தொப்பூர் கணவாயில் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தல்
Published on

தர்மபுரி,

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாயில் அடிக்கடி விபத்து நடப்பதை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரன், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் வரதராஜன், திட்டத்தலைவர் சதீஷ்குமார், பராமரிப்பு மேலாளர் சின்னத்துரை, செயல்பாட்டு மேலாளர் நரேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-

தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விபத்துகளை தடுக்க கூடுதலாக சோலார் மின்விளக்குகள், சிக்னல் மூலம் வாகன டிரைவர்களுக்கு வளைவுகள் குறித்து அறிவிப்பு செய்தல், விழிப்புணர்வு பலகைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சாலை பராமரிப்பு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் வாகனங்களை வேகமாக இயக்குவதை கட்டுப்படுத்த 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையை மேம்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும். இந்த முன்மொழிவுகள் மீது துரித நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com