விபத்து உயிரிழப்புகளை தடுக்க மேற்கு மண்டல போலீசார் வெளியிட்ட 2 ஆயிரம் ‘மீம்ஸ்’ பொதுமக்கள் வரவேற்பு

கோவை மேற்கு மண்டல போலீஸ் சார்பில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘மீம்ஸ்’கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
விபத்து உயிரிழப்புகளை தடுக்க மேற்கு மண்டல போலீசார் வெளியிட்ட 2 ஆயிரம் ‘மீம்ஸ்’ பொதுமக்கள் வரவேற்பு
Published on

கோவை,

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது கோவை மேற்கு மண்டலம். இந்த மாவட்டங்களில் குற்றங்கள்-விபத்துகளை தடுக்க கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஐ.ஜி. அலுவலகத்தில் சமூகவலைத்தள பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசாரை கொண்ட இந்த பிரிவில் பணியாற்றும் போலீசார் ஹெல்மெட் அணிவதின் அவசியம், போக்குவரத்து விதிமீறல், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது, காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும், மதுகுடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்டவை குறித்து மீம்ஸ் தயாரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீம்ஸ்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதனை 10 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். தினமும் 10 முதல் 15 மீம்ஸ்களை போலீசார் வெளியிடுகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கான மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் நாங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள், குற்றச்சம்பவங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com