ரத்தசோகை குறைபாட்டை தடுக்க கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வினியோகம் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்

ரத்தசோகை குறைபாட்டை தடுக்க மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வினியோகம் செய்யப்படுகிறது என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
ரத்தசோகை குறைபாட்டை தடுக்க கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வினியோகம் - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகமும், புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகமும் இணைந்து கோவிட்19 மற்றும் ஊட்டச்சத்து உணவு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு குறித்த கருத்தரங்கை காணொலி காட்சி மூலம் நடத்தின. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 1,06,211 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 22 லட்சம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மாநில அளவில் கடலூர் முதலிடத்தை பெற்றுள்ளது. இதேபோல் எதிர்வரும் காலங்களிலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களுக்கும் போஷான் அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்து உணவுகளும் வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் உடல், மனம், சமூக ரீதியாக ஆரோக்கியத்துடன் வளர்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும். குழந்தை பெற்ற தாய்மார்கள் உடல் நலம் பேணப்படுவதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும். குழந்தை பிறந்தது முதல் 6 மாத காலத்திற்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

7-ம் மாதம் முதல் தாய்ப்பாலுடன், இணை உணவுகள் வழங்க வேண்டும். மாவட்டத்தில் 3 மாத கர்ப்ப காலத்தில் உள்ள 2,817 கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை நிலையை குறைப்பதற்காக சிவப்பு அரிசி கலந்த சத்துமாவு ஜூலை மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இது வருகிற டிசம்பர் வரை வினியோகம் செய்யப்படும்.

கொரோனா பரவல் காலகட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, சத்தான உணவு மற்றும் மருந்துகள் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வாரந்தோறும் 3 முட்டைகள் வழங்கிட வேண்டும் என்றார்.

இந்த காணொலி காட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் க.குழந்தைசாமி, சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும முன்னாள் தலைமை இயக்குனர் டாக்டர் ராமசுவாமி, சென்னை இணை இயக்குனர் காமராஜ், துணை இயக்குனர் டாக்டர் கீதா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com