பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு

விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
Published on

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். ஆத்தூர் அருகே உள்ள காராமணித்திட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து மனு கொடுத்தனர்.

இந்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை காப்புக்காட்டில் வசிக்கும் வனவிலங்குகள் அடிக்கடி சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். மேலும் நிலத்தை சுற்றி அகழி அல்லது தடுப்புவேலி அமைக்க அனுமதியளிக்க வேண்டும். அகழி வெட்டியதற்காக வனத்துறை அதிகாரி ஒருவர் எங்களை சுட்டு கொன்றுவிடுவேன் என்று கூறி துப்பாக்கி காட்டி மிரட்டினார். அதுதொடர்பாக விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவர் நேற்று தனது மனைவி வசந்தியுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர்கள், வழித்தட பாதையை மீட்டு தரவேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனரை பிடித்தவாறு வந்தனர்.

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் இருந்து பேனரை பறித்தனர். இதையடுத்து அய்யனார் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார். அதில், பூர்விக வழித்தட பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பாதையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது..

மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணி சார்பில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், சேலம் ரெட்டியூர் கிராமம் கோமாளிக்காடு என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com