மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி; 2 பேர் கைது

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலரை டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி; 2 பேர் கைது
Published on

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணையை ஒட்டியுள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் இரவு, பகலாக டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளி கடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு லோடு மணல் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சுற்று வட்டார கிராமங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஆற்றில் மணல் அள்ளுவதால் கனிமவளங்கள் குறைவதோடு, அந்த பகுதிகளில் விவசாயம் பொய்த்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே பருவமழை முறையாக பெய்யாத நிலையில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. எனவே அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் அய்யம்பாளையம்-மருதாநதி ரோட்டில் 5 டிராக்டர்களில் மணல் அள்ளப்பட்டு வருவதாக அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார், உதவியாளர் செல்வி ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து அந்த பகுதி வழியாக வந்த டிராக்டர் களை நிறுத்துமாறு மறித்துள்ளனர்.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் மீது டிராக்டர்களை ஏற்ற வந்ததாக கூறப்படுகிறது. சுதாரித்து கொண்டு ரவிக்குமார் விலகியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு, டிராக்டர்களில் வந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கிராம நிர்வாக அலுவலரை டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றதாக அய்யம்பாளையத்தை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் காசி (வயது 45), விஜி (32), சேகர் (45), வேல்முருகன் (46), வடிவேல் (34) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் வடிவேல், வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் கவுன்சிலர் காசி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்னதாக சம்பவம் நடந்த இடத்தில் ஆத்தூர் தாசில்தார் ராஜகோபால், பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சீமைராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். கிராம நிர்வாக அலுவலர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com