பருவமழை பாதிப்பை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை: பெங்களூருவில் 210 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதி - மந்திரி ஆர்.அசோக் தகவல்

பெங்களூருவில் 210 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், பருவமழை பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.
பருவமழை பாதிப்பை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை: பெங்களூருவில் 210 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதி - மந்திரி ஆர்.அசோக் தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் எடுக்க வேண்டிய பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் கவுதம்குமார், மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரியம், தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, போலீஸ் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் பேசியதாவது:-

கர்நாடகத்தில் பருவமழை தொடங்க உள்ளது. மழையின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க அதிகாரிகள் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெங்களூரு வருவாய் மண்டலத்தில் உள்ள இயற்கை பேரிடர் மீட்பு குழுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். நகரில் எந்தெந்த பகுதியில் அதிக மழை பெய்யும், வெள்ளம் ஏற்படும் பகுதிகள், காற்றின் வேகம், எந்த பகுதியில் அதிக முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முழு விவரங்கள் வெளியிடப்படும்.

தினமும் வானிலை அறிக்கை வந்ததும், மழை குறித்து விவரங்கள், முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை தகவல்களை வெளியிடும். பெங்களூருவில் 210 இடங்கள் வெள்ளம் பாதிக்கும் பகுதியாக அடையாளம் கண்டுள்ளோம். இயற்கை பேரிடர் நிர்வாக மையம், நகரில் 21 இடங்களில் சென்சார் கருவியை பொருத்தியுள்ளது.

அந்த பகுதிகளில் உள்ள கால்வாய் 75 சதவீதம் நிரம்பினால், உடனே அதுபற்றி தகவலை கட்டுப்பாட்டு மையத்திற்கு வழங்கும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளிலும் சென்சார் கருவியை பொருத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

பெங்களூருவில் மரங்கள் முறிந்து விழுந்தவுடன் போலீசார் அதை சுற்றிலும் இரும்பு தடுப்புகளை வைக்க வேண்டும். மின் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மழை பாதிப்புகளின்போது மீட்பு பணிகளை மேற்கொள்ள 500 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

இதற்கு ஆகும் செலவை மாநகராட்சி ஏற்கும். மேலும், நகரில் திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழிகளை உடனே மூட வேண்டும். இரவு நேரங்களில் முறிந்து விழும் மரங்களை துண்டுகளாக வெட்டி அகற்ற தேவையான விளக்குகளை தயாராக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழையின்போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இயற்கை பேரிடர் நிர்வாகத்திற்கு ரூ.310 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் மழை பாதிப்புகள் ஏற்படும் மக்களை திருமண மண்டபங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நகரில் கால்வாய்களில் உள்ள மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com