கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 50 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 50 பேர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இது தொடர்பாக 142 வீடுகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 50 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதி
Published on

தஞ்சாவூர்,

டெல்லி நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் சென்று பங்கேற்றனர். இதில் தமிழகத்தில் இருந்தும் 1,131 பேர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அனைத்து மாவட்டங்களிலும் இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அதன்படி டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இவர்களில் இந்தோனேஷியாவை சேர்ந்த 12 பேர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் குறித்து சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்று அதிராம்பட்டினத்தில் தங்கியிருந்த மேற்குவங்காளத்தை சேர்ந்த 10 பேர், பெங்களூரை சேர்ந்த 9 பேர், அதிராம்பட்டினத்தை சேர்ந்த 9 பேர் என மொத்தம் 28 பேர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அங்கு இவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 3 பேரும், திருவையாறு பகுதியை சேர்ந்த 5 பேரும், பாபநாசத்தை சேர்ந்த 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் தேடி வருகின்றனர். மேலும் பலர் பிற மாநிலங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அதிராம்பட்டினத்தில் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று, கொரோனா பரவலை தடுப்பதற்காக மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 142 வீடுகளில் வசிப்பவர்களிடம் சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது. லேசான காய்ச்சல் இருந்தவர்களிடம் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com