கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வாகனங்களில் வருபவர்களுக்கு போலீசார் தீவிர பரிசோதனை

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் வாகனங்களில் வருபவர்களுக்கு போலீசார் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வாகனங்களில் வருபவர்களுக்கு போலீசார் தீவிர பரிசோதனை
Published on

தேனி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கேரள மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு பஸ், ஜீப் உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. நேற்றும் இருமாநில எல்லைகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் துறையை சேர்ந்த குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் மதுரை, திண்டுக்கல் மாவட்ட எல்லைகளிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே கணவாய், தேவதானப்பட்டி அருகே காட்ரோடு ஆகிய பகுதிகளில் போலீசாரும், சுகாதாரத்துறையினரும் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி அதில் பயணித்த நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறி எதுவும் உள்ளதா? என பரிசோதனை செய்தனர்.

அத்துடன் தேனி, கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம், போடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. ஆங்காங்கே போலீசார் நின்று கொண்டு வாகன தணிக்கை செய்து, வாகனங்களில் இருந்தவர்களை பரிசோதனை செய்தனர். கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பஸ்களையும் மறித்து ஒவ்வொரு பயணிகளாக பரிசோதனை நடத்தினர்.

இதேபோல் தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை, போலீசார், ஆண்டிப்பட்டி பேரூராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் தேனி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் மறித்து வாகனங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணதெய்வேந்திரன் தலைமையிலான போலீசார் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணியை கண்காணித்து வருகின்றனர். மேலும் வாகனங்களில் வருபவர்கள் அனைவரையும் கீழே இறக்கி, அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருக்கிறதா? என்றும் டாக்டர் நவீன்குமார் தலைமையிலான சுகாதாரத்துறையினர் கேட்டறிந்து வருகின்றனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்கின்றனர்.

மாவட்டத்திற்குள் வருபவர்களின் பெயர், செல்போன் எண்கள், முகவரி போன்ற விவரங்களை அறிந்த பின்னரே, அவர்களை தேனி மாவட்டத்திற்குள் செல்ல மருத்துவக்குழுவினர் அனுமதித்து வருகின்றனர். இதுவரை மேற்கொண்ட சோதனையில் யாருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்றும், தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மாவட்ட எல்லையான தேவதானப்பட்டி காட்ரோடு போலீஸ் சோதனை சாவடியில் நேற்று காலை அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் என்று போலீசார் பரிசோதனை செய்து அதன் பின்னரே அனுமதிக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்குள் செல்லும் வாகனங்களை கணவாய் மலைப்பகுதியில் மதுரை மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் போலீசார் முகாம் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com