

மங்களூரு,
உடுப்பி அருகே ஹெப்ரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெலிஜே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனந்தா என்ற சுமா(வயது 34). இவர் கடந்த 17-ந் தேதி அப்பகுதியில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அப்போது அவர் அங்கிருந்த அர்ச்சகர் ரமேஷ் பட்டிடம், தனது மார்பு பகுதியில் ஒரு அடையாளம் தோன்றி இருப்பதாகவும், அது தெய்வத்தின் அருளா? என்று தெரியவில்லை எனவும் கூறியிருக்கிறார். அதையடுத்து அர்ச்சகர் ரமேஷ் பட்டிடம் தனது மார்பு பகுதியையும் காட்டி ஆபாசமாக பேசியிருக்கிறார்.
அப்போது சபலம் அடைந்த அர்ச்சகர் ரமேஷ் பட்டும், சுமாவிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதை சுமா ரகசிய கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். பின்னர் அவர் அந்த வீடியோவை தனது கூட்டாளிகள் கிரண் செட்டி, மஞ்சுநாத் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள் அந்த வீடியோவை ரமேஷ் பட்டிடம் காண்பித்து ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் பதறிப்போன ரமேஷ் பட் இதுபற்றி ஹெப்ரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமாவையும், கிரண் செட்டியையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மஞ்சுநாத்தை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கைதான சுமா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இதேபோன்று ஏராளமானோரிடம் பணம் பறித்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.