வெயிலில் இருந்து காத்துக்கொள்ள பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுரை

வெயிலில் இருந்து காத்துக்கொள்ள பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் கந்தசாமி அறிவுறுத்தி உள்ளார்.
வெயிலில் இருந்து காத்துக்கொள்ள பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
Published on

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. எனவே வெயில் காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

தாகம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். உடலை இறுக்கி பிடிக்காத தளர்வான, வெளிர் நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிதல் வேண்டும். வீட்டில் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையிலும் பராமரித்து கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும் போது குடை அல்லது தொப்பியை பயன்படுத்துவதுடன், காலணியையும் அணிந்து செல்ல வேண்டும். கோடை காலத்தில் இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.

அதிக புரத சத்துள்ள உணவு மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவர்.

எனவே இவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை வெப்பம் காரணமாக அதிக வியர்வை, அதிக தாகம், தசை பிடிப்பு, சோர்வு, மயக்கம் ஆகியவற்றினால் பாதிக்கப்படலாம். வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக நிழலான குளிர்ந்த பகுதியில் படுக்க வைக்க வேண்டும். குளிர்ந்த நீர், பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். உப்பு சர்க்கரை கரைசல் போன்றவற்றை அருந்த கொடுக்கலாம்.

நினைவு இழந்த நிலையில் இருந்தால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.

கோடை காலத்தில் காட்டுத் தீ ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் காட்டு பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். கோடை வெப்பம் தொடர்பாக பொதுமக்கள் 1077 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com