சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிரம்

மராட்டிய சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சுயேச்சை மற்றும் சிறிய கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாரதீய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிரம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தன. ஆனால் அதிரடி திருப்பமாக நேற்றுமுன்தினம் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது.

2-வது முறையாக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரி ஆனார். வருகிற 30-ந் தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் கெடு விதித்து உள்ளார்.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாரதீய ஜனதாவுக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவிடம் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர்.

பாரதீய ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளநிலையில், அக்கட்சி தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்து துணை முதல்-மந்திரியான அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரசின் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

எனவே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது பாரதீய ஜனதாவுக்கு பெரிய சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே அந்த கட்சி சிறிய மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை தன்பக்கம் இழுக்க தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் சிறிய கட்சி களின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகள் 29 பேரும் முக்கியத்துவம் பெற்று உள்ளனர். அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதில்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மிராபயந்தரில் பாரதீயஜனதா அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கீதா ஜெயின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாரதீய ஜனதாவை ஆதரிப்பேன் என தெரிவித்தார்.

பிரகார் ஜன்சக்தி கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் சிவ சேனாவை ஆதரிப்பார்கள் என அக்கட்சியின்தலைவர் பச்சுகடு கூறினார். ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் அந்த கட்சி பாரதீய ஜனதா, சிவசேனா இரண்டையுமே ஆதரிக்க மாட்டோம் என தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில், தேவேந்திர பட்னாவிசுக்கு 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாகவும், எனவே பாரதீய ஜனதா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கும் என்றும் அக்கட்சி தலைவர் ஆஷிஸ்செலார் கூறினார்.

பால்தாக்கரேயின் கொள்கைகளை கைவிட்டதன் மூலம் சிவசேனா பாவம் செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்கு பாரதீய ஜனதாவுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால் அந்த கட்சி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இதற்கிடையே குதிரை பேரத்தில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ள சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த ஓட்டல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com