

காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லூர் கீழத்தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக்குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இதுபற்றி ஊராட்சி அலுவலகம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 9.30 மணியளவில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் அங்குள்ள பழஞ்சநல்லூர்-பாப்பாகுடி சாலைக்கு திரண்டு வந்து வந்ததோடு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, குடிநீர் பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனை ஏற்ற பெண்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.