மழைநீரை சேமிக்க வரத்து வாரி, ஏரி, குளங்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மழைநீரை பாதுகாத்து சேமிக்க வரத்து வாரி, ஏரி, குளங்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மழைநீரை சேமிக்க வரத்து வாரி, ஏரி, குளங்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
Published on

புதுக்கோட்டை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செங்கோடன், துணை செயலாளர்கள் ஏனாதி ராசு, தர்ம ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில துணை செயலாளர் சுப்புராயன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் விவசாயத்தை பாதுகாத்திடவும், நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்திடவும், குடிநீர் தட்டுபாட்டை போக்கவும் தென்னக நதிகள் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியான காவிரி-வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, உடனடியாக நிவாரண பணிகளை தொடங்க வேண்டும்.

மழைநீரை பாதுகாத்து சேமிக்க வரத்து வாரிகள், ஏரிகள், குளங்களை தூர்வாரி அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தின் வறட்சிக்கு காரணமாக உள்ள தைல மரங்களை அகற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக மூடி விட்டு நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி உணவகங்களில் ஏழை நோயாளிகளை பாதிக்கும் வகையில் விற்கப் படும் உணவு பொருட்களின் தரத்தையும், விலையையும் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட் கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com