தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை சரி செய்ய 200 பொக்லின் எந்திரம், டிப்பர் லாரிகள் தயார் - குடிநீர் தடை இல்லாமல் வழங்க திட்ட இயக்குனர் உத்தரவு

புயல் பாதிப்புகள் ஏற்பட்டால் சரி செய்ய 200 பொக்லின் எந்திரம், டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை சரி செய்ய 200 பொக்லின் எந்திரம், டிப்பர் லாரிகள் தயார் - குடிநீர் தடை இல்லாமல் வழங்க திட்ட இயக்குனர் உத்தரவு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டால் சரி செய்ய 200 பொக்லின் எந்திரம், டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குடிநீர் தடை இல்லாமல் வழங்கவும் திட்ட இயக்குனர் மந்திராசலம் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர பகுதிகளான சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை ஆகிய 2 ஒன்றியங்களை மிக தீவிரமாக கண்காணிப்பதோடு, புயலின் தாக்கத்தினால் சேதம் ஏற்பட்டால் அதை சரி செய்ய 200-க்கும் மேற்பட்ட பொக்லின் எந்திரங்கள் ஊராட்சிகளில் தயார் நிலையில் டிரைவர்களுடன் அடுத்த 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த மரம் அறுக்கும் எந்திரம், கயிறு மற்றும் வாகனங்களோடு ஆட்களும் தயார் நிலையில் உள்ளனர். மரங்களை அப்புறப்படுத்துவதற்காக குறிப்பிட்ட ஒவ்வொரு சாலைகளிலும் 4 டிப்பர் லாரிகள், மரம் அறுக்கும் எந்திரங்கள் உதவியுடன் நிறுத்தப்பட்டுள்ளன.

மின்சாரம் தடைபட்டால் அதை சமாளிக்கவும், குடிநீர் வினியோகம் தடைபடாமல் இருக்க எல்லா கிராமங்களில் ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத ஊராட்சி செயலாளர்கள், பணியாளர்கள் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com