கட்சியை பாதுகாக்க வேண்டுமானால் அ.தி.மு.க.வினர் அனைவரும் பேராசையை கைவிட வேண்டும் - திவாகரன் பேட்டி

கட்சியை பாதுகாக்க வேண்டுமானால், அ.தி.மு.க.வினர் அனைவரும் பேராசையை கைவிட வேண்டும் என்று திவாகரன் கூறினார்.
கட்சியை பாதுகாக்க வேண்டுமானால் அ.தி.மு.க.வினர் அனைவரும் பேராசையை கைவிட வேண்டும் - திவாகரன் பேட்டி
Published on

சுந்தரக்கோட்டை,

பெரியார், எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி அண்ணா திராவிடர் கழகம் சார்பில் மன்னார்குடியில் அமைதி ஊர்வலம் நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் தலைமையில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அந்த கட்சியினர் மாலை அணிவித்தனர்.

பின்னர் திவாகரன் நிருபர் களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் ஏற்கனவே இருந்த தலைவர்கள் சுயநலமின்றி செயல்பட்டனர். அதனால் கட்சி உடைந்தபோதெல்லாம் மீண்டும் ஒன்று சேர்ந்து வலுவாக உரு வெடுத்தது. தற்போது ஆளாளுக்கு பேசத் தொடங்கி விட்டதால். கட்சி இணைப்பு போன்ற நிகழ்வுகள் நடப்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

அ.தி.மு.க.வை விட அ.ம.மு.க. வலுவாக இல்லை. அ.ம.மு.க.வில் இருப்பவர்கள் பலர் எங்களுடைய உறவினர்கள்தான். தமிழகத்தின் மேற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களில் அ.ம.மு.க.விற்கு தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. ஒரே பகுதியில் இருந்து கூட்டத்தை அழைத்துக்கொண்டு நாடக செட்டு போல கூட்டங்களை நடத்துகிறார்கள். அவர்களது கூட்டங்களில், உள்ளூர் பிரமுகர்கள் இருக்க மாட்டார்கள். அப்படித்தான் மேலூரிலும் முதல் கூட்டம் போடப்பட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து வருகிற சேதாரங்கள் மட்டுமே அ.ம.மு.க. மற்றும் எங்கள் கட்சிக்கு வருகின்றனர். அங்குள்ள உள்ளூர் அரசியல் பிரச்சினை காரணமாக இந்த சேதாரங்கள் உள்ளன. இதனை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உற்று நோக்க வேண்டும்.

மேலும் தினகரனின் அரசியல் என்பது நயவஞ்சகத்தனமானது. அ.ம.மு.க.வை தொடங்கிய பின்னர் அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரும் வழக்குகளை ஏன் நடத்த வேண்டும். சசிகலாவும், தினகரனும் அ.தி.மு.க., அ.ம.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் எப்படி பொதுச்செயலாளர், துணைப்பொதுச்செயலாளர் பதவி வகிக்க முடியும்.

எனக்குத் தெரிந்து தினகரனை நம்பி செந்தில் பாலாஜி பல கோடி ரூபாயை அ.ம.மு.க.வுக்கு செலவு செய்துள்ளார். அவரே கட்சி மாறி விட்ட நிலையில் மற்ற எம்.எல்.ஏக்களும் நம்பிக்கையிழந்துள்ளனர் என்ற தகவல் வருகின்றது. அ.தி.மு.க எல்லோரும் சேர்ந்து வளர்த்த கட்சி. அதனை பாதுகாக்க வேண்டுமானால் அனைவரும் பேராசையை கைவிட்டு சில தியாகங்களை செய்ய முன்வர வேண்டும்.

அதன் மூலம் கட்சியையும், தொண்டர்களையும் வலுப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக இருந்தாலும் கட்சியை ஒருங்கிணைக்க தூய்மையான எண்ணத்தோடு செயல்பட வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வினரது செயல்பாடுகள் செயற்கையாகத் தெரிகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com