நடைமேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்-காங்கேயம் சாலையில் நடைமேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நடைமேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
Published on

நல்லூர்,

திருப்பூர் மாநகரம் தொழில் நகரமாக உள்ளதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இதனால் திருப்பூரில் உள்ள முக்கிய சாலைகளான அவினாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதனால் பாதசாரிகள் பாதையை கடக்கும் போது விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டு வந்தது. விபத்தை தவிர்க்கும் விதமாக மாநகராட்சியால் 6 இடங்களில் நடைமேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் காங்கேயம் ரோட்டில் ராக்கியாபாளையம் பிரிவு நால்ரோடு, அருகே நடை மேம்பாலம் அமைக்க குழிகள் தோண்டப்பட்டது. ஆனால் அருகில் உள்ளவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் அந்த பணிகள் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. மேலும் சில தனி நபர்களின் அழுத்தம் காரணமாகவும், அரசியல் தலையீடு காரணமாகவும் அதிகாரிகள் பாலம் அமைக்கும் பணியினை மாற்று இடத்தில் அமைக்க முடிவு செய்தனர்.

அதை தொடர்ந்து நல்லூரில் 3-வது மண்டல அலுவலகம், அம்மா உணவகம் அருகில் இருந்து எதிரில் உள்ள ஆதிதிராவிடர் காலனி வரை காங்கேயம் ரோடு, குறுக்கே ரூ.43 லட்சத்தில் நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த ஆண்டு பணி தொடங்கப்பட்டது. அப்போது ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் கோவில் அருகில் நடை மேம்பாலம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக பாலத்தின் பாதையை மாற்றி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அங்கு சென்று பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதி பொதுமக்கள் அங்கு நடை மேம்பாலம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் காங்கேயம் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஊரக இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், பழனிசாமி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

பின்னர் நல்லூர் ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் நடை மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் நல்லூர் மண்டல அலுவலகம் எதிரில் ஆதிதிராவிடர் காலனி முன்பு வரும் நடைமேம்பாலம் காரணமாக ஆதி திராவிடர் பகுதி கடைகள் மற்றும் 300 வீடுகளுக்கு செல்லும் நடை பாதை முற்றிலும் பாதிக்கிறது. மேலும் அப்பகுதியில் பெரிய அளவிலான போக்குவரத்து இல்லாத பகுதி ஆகையால் இப்பகுதிக்கு பாலம் தேவையற்றது. எனவே பொதுமக்களுக்கு உபயோகமான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் அமைக்க தங்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com