வாகனங்களில் காய்கறிகள் விற்பதை தடுக்கக்கோரி - வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சியில் சாலையோரம் வாகனங்களில் காய்கறிகள் விற்பதை தடுக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனங்களில் காய்கறிகள் விற்பதை தடுக்கக்கோரி - வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் பெருந் தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளுக்கு வாடகையாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை நகராட்சிக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக கச்சிராயப்பாளையம் சாலை, சேலம் மெயின் ரோடு, துருகம் சாலை, சுந்தரவிநாயகர் கோவில் தெரு உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் சிலர் ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் வைத்து காய்கறிகள் விற்பனை செய்கின்றனர்.

இதனால் பெரும்பாலான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க மார்க்கெட்டுக்கு வராமல், சாலையோரம் வாகனங்களில் விற்கப்படும் காய்கறிகளையே வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறி வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

வியாபாரிகள் நகராட்சிக்கு வாடகை மற்றும் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சாலையோரம் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று கூறி வியாபாரிகள் நேற்று முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.ஆர்.ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.சி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வியாபாரிகள் ராமலிங்கம், காமல்ஷா, இப்ராஹிம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டிருந்ததால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com