குடும்ப சொத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த விவசாயி வரிசையில் நின்ற முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

குடும்ப சொத்தை மீட்டு தரக்கோரி விவசாயி ஒருவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார். மேலும் ஓய்வூதியம் கேட்டு வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடும்ப சொத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த விவசாயி வரிசையில் நின்ற முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Published on

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

கடையம் அருகே உள்ள கீழக்கடையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சீருடையுடன் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், நாங்கள் மேற்கண்ட அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறோம். தற்போது வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பதில் எழுதுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பழைய முறைப்படி வினாத்தாள்கள் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், கலெக்டரை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில், குருக்கள்பட்டி கிராமத்தில் 7-வது வார்டு வடக்கு தெருவில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. அனைவரும் வடக்கு தெருவை பொதுப்பாதையாக பயன்படுத்தி வருகிறோம். அந்த பகுதியில் அமைந்துள்ள குடிநீர் அடிபம்பை பயன்படுத்தி குடிநீர் எடுத்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் அடிபம்பை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எங்களால் தண்ணீர் எடுக்க முடியவில்லை. பொதுப்பாதையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழு தலைவி, உறுப்பினர்களுக்கு தெரியாமல் கடன் வாங்கி உள்ளார். வங்கி அதிகாரிகள் எங்களிடம் பணம் கேட்கிறார்கள். எனவே சுயஉதவிக்குழு தலைவியை கைது செய்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நெல்லையை அடுத்த கொண்டாநகரம் பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

களக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என்றும், கடையம் அருகே உள்ள மந்தியூரை சேர்ந்த பெண்கள் முதியோர் உதவி தொகை கேட்டும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லையை அடுத்த ராமையன்பட்டி விலக்கில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் கிராமத்தை அடுத்த அருணகிரிபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 66). விவசாயியான இவர், கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை சோதனை செய்தனர். அவரிடம் மண்எண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கருப்பையாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், எனது குடும்ப சொத்தை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை மீட்டுத்தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனுடன் வந்தேன் என்றார். அவரை போலீசார் ஜீப்பில் ஏற்றி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கருப்பையா உறவினர்களை வரவழைத்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்த சுந்தரம் (70) என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு கொடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு லேசான ரத்தக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அவர், கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு தான் செல்வேன் என்று கூறினார். பின்னர் சுந்தரம் ரத்தக்காயத்துடன் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தார். தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் வேன் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com