மயக்க மருந்து கொடுத்து பெண் ஊழியரை கற்பழித்தவருக்கு முன்ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

மத்திய அரசு பெண் ஊழியருக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த வாலிபருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மயக்க மருந்து கொடுத்து பெண் ஊழியரை கற்பழித்தவருக்கு முன்ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மத்திய அரசு ஊழியரான இவர், அண்ணாநகர் மகளிர் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-

கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். சென்னை அண்ணாநகர், தெற்கு காலனியை சேர்ந்த வெள்ளைதேவன் (24), என்னிடம் தம்பி போல பழகினான். அவனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாநகரில் உள்ள 3 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றான். அங்கு கேக் வெட்டி கொண்டாடியபிறகு, நான் வீட்டிற்கு புறப்பட்டேன். அப்போது, எனக்கு அவன் குளிர்பானம் கொடுத்தான். அதை குடித்ததும், மயங்கி விழுந்து விட்டேன்.

கண் விழித்து பார்த்தபோது, நிர்வாண கோலத்தில் படுக்கையில் கிடந்தேன். என்னை என்ன செய்தாய்? என்று நான் கதறி அழுதபோது, என்னுடைய பிறந்தநாள் பரிசே நீதான் என்று அவன் கூறினான்.

மேலும், ஆபாசமாக வீடியோ படமும் எடுத்துள்ளான். இதை காட்டி அவ்வப்போது என்னிடம் பணம் பறித்து வருகிறான். அவனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால், அந்த படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறான். ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, மோட்டார் சைக்கிள், 1 பவுன் தங்கச்சங்கிலி, பெட்ரோல் செலவு, உடலை வலுப்படுத்த பயிர் வகைகள் வாங்க பணம் என்று இதுவரை சுமார் ரூ.15 லட்சம் பறித்துள்ளான். தற்போது திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்று கூறி என்னை தற்கொலை செய்து கொள்ளும்படி அசிங்கமாக திட்டுகிறான். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், வெள்ளைதேவன் மீது பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு அவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வெள்ளைதேவனுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று லட்சுமி மனு தாக்கல் செய்தார். இவர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து வெள்ளைதேவனுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்தார். இதனால் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக அவரது வக்கீல் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com