நூதனமுறையில் பேசி பெண்ணிடம் ரூ.23 ஆயிரம் மோசடி

ராமநாதபுரம் அருகே பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் எண்ணில் இருந்து வங்கி மேலாளர் என பேசி நூதன முறையில் பெண்ணிடம் ரூ.23 ஆயிரம் மோசடி செய்தவரை சைபர்கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
நூதனமுறையில் பேசி பெண்ணிடம் ரூ.23 ஆயிரம் மோசடி
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் எண்ணில் இருந்து வங்கி மேலாளர் என பேசி நூதன முறையில் பெண்ணிடம் ரூ.23 ஆயிரம் மோசடி செய்தவரை சைபர்கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.

வங்கி மேலாளர் என கூறி

ராமநாதபுரம் அருகே உள்ள குளத்தூர் தெற்குத்தெருவை சேர்ந்த காரல் மார்க்ஸ் என்பவரின் மனைவி அபிநயா (வயது 22). இவர் ஆசிரியர் கல்வி படித்துவிட்டு போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவர் ராமநாதபுரம் பாரதஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து அதனை ஜீபே செயலியுடன் இணைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது வங்கி கணக்கின் இருப்பினை பார்ப்பதற்காக ஜீபே செயலியை பார்த்தபோது முடியாததால் இணையதளத்தில் பாரதஸ்டேட் வங்கியின் இலவச எண்ணை தேடி அதனை தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் ஸ்டேட் வங்கியின் மேலாளர் என்றும் ஜீபே செயலியில் வங்கி கணக்கினை இணைக்க எனிடெஸ்க் எனப்படும் செயலியை செல்போனில் இணைத்தால் செய்து காண்பிப்பதாக தெரிவித்துள்ளார். அதனை முயன்று பார்த்து முடியாத நிலையில் வங்கி ஏ.டி.எம். கார்டின் பின்பக்க 16 இலக்க எண்ணை கேட்டுள்ளார். அதனை தெரிவித்தபோது அடுத்தடுத்து வந்த ரகசிய எண்ணை கேட்டு வாங்கியுள்ளார். அதன் அடிப்படையில் அபிநயாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.23 ஆயிரத்து 265 பணத்தினை எடுத்து கொண்டு இணைப்பை மர்ம நபர் துண்டித்துவிட்டார்.

போலீசில் புகார்

நூதனமாக பேசி தனது பணத்தை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி அபிநயா சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இணையதளத்தில் உள்ள பாரதஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய இலவச தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசும்போது நூதனமாக பேசி பணத்தை மோசடி செய்யும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் இணையதளத்தில் இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி பெயரில் உள்ள வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை ஆய்வு செய்து அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த எண்ணை பதிவு செய்து மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com