

பெங்களூரு,
பெங்களூரு கோரமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த மாதம் (மே) 31-ந் தேதி இரவு அந்த இளம்பெண் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். கோரமங்களா மெயின் ரோட்டில் வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் வாலிபர் சென்று விட்டார்.
இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மர்மநபர்களையும் போலீசார் தேடிவந்தார்கள். இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை கோரமங்களா போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர் கோலார் தங்கவயல், ராபர்ட்சன் பேட்டையை சேர்ந்த அருண்குமார் (வயது 27) என்று தெரியவந்தது. இவர், பெங்களூருவில் தங்கி இருந்து டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளார். இதன் காரணமாக ஊரடங்கிலும் வெளியே சுற்றி திரிய அருண்குமாருக்கு அனுமதி கிடைத்திருந்தது.
இதனை சாதகமாக பயன்படுத்தி கடந்த மாதம் 31-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சுற்றி திந்த போது, தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
மேலும் அருண்குமாரை பிடிக்க கோரமங்களா பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்திருந்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் 60-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரித்த போது தான் அருண்குமார் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது. கைதான அருண்குமார் மீது கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.