

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் (பொறுப்பு) ஜெகன்நாதன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சின்னமுத்து, லட்சுமணபெருமாள், ரத்தினம், ரவி, அழகுவேல் ஆகியோர் கடந்த 3 மாதங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடை, பெட்டி கடை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த கடைகளில் இருந்து பான்மசாலா, குட்கா, பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் அரிசிமாவு, கோதுமை மாவு, கடலை மாவு பாக்கெட்டுகள், சாக்லெட், ரஸ்க், டால்டா உள்ளிட்ட காலாவதியான உணவு பொருட்களையும் பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைத்திருந்தனர். மேலும் டீக்கடைகளிலிருந்து கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான உணவு பொருட்கள் ஆகியவற்றை அழிப்பதற்காக பெரம்பலூர் அருகேயுள்ள நெடுவாசல் குப்பை கிடங்கு பகுதிக்கு நேற்று உணவு பாதுகாப்புத்துறையினர் கொண்டு வந்தனர். பின்னர் பாக்கெட்டுகளை பிரித்து உள்ளே இருந்த பொருட்களை கீழே கொட்டினர். பாலிதீன் பாக்கெட்டுகள் முறைப்படி குப்பை கிடங்கில் போடப்பட்டன. மேலும் அந்த இடத்தில் குழி தோண்டி புகையிலைபொருட்கள், காலாவதியான உணவு பொருட்களை உள்ளே போட்டு புதைத்து அழித்தனர். 106 கிலோ புகையிலை பொருட்களும், 75 கிலோ காலாவதியான உணவு பொருட்களும் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் உணவு பாதுகாப்புத்துறையினரின் ஆய்வு நடவடிக்கை தொடரும். தொடர்ச்சியாக புகையிலை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டீயின் நிறத்திற்காக டீத்தூளில் கார்மாய்சின் என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இதனால் குடல்புண், புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக கலப்பட டீத்தூள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு டீக்கடைக்காரர்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.