ஊட்டி அருகே மொர்பர்த் பண்டிகை கொண்டாடிய தோடர் இன மக்கள் இளவட்டக் கல்லை தூக்கி வாலிபர்கள் அசத்தல்

ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் தோடர் இன மக்கள் மொர்பர்த் பண்டிகையை கொண்டாடினர். இளவட்டக் கல்லை தூக்கி வாலிபர்கள் அசத்தினர்.
ஊட்டி அருகே மொர்பர்த் பண்டிகை கொண்டாடிய தோடர் இன மக்கள் இளவட்டக் கல்லை தூக்கி வாலிபர்கள் அசத்தல்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. தற்போதும் தங்களது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களை கடைபிடித்து வருகிறார்கள். நீலகிரியில் தோடர் இன மக்களின் தலைமையிடமாக முத்தநாடுமந்து திகழ்கிறது. அங்கு மாவட்டம் முழுவதும் உள்ள மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் ஒன்றுகூடி ஆண்டுதோறும் மொர்பர்த் என்று அழைக்கப்படும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊட்டி அருகே முத்தநாடுமந்தில் மொர்பர்த் பண்டிகையை நேற்று கொண்டாடினர். இதையொட்டி அவர்கள் விரதம் இருந்து மூன்போ என்ற கோவிலில் வழிபட்டனர். அவர்கள் சந்தன பொட்டு வைத்தும், தங்களது பாரம்பரிய உடை அணிந்தும் இருந்தனர். தொடர்ந்து மூன்போ கோவிலில் இருந்து தோடர் இன மக்கள் ஊர்வலமாக ஒர்யள்வோ என்ற கோவிலுக்கு சென்றனர். அங்கு வேண்டிக் கொண்டபோது தரையை நோக்கி குனிந்து வணங்கினர். பின்னர் தோடர் இன மக்கள் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று வழிபட்டு, காணிக்கை மற்றும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பாரம்பரிய நடனம்

அந்த கோவிலை சுற்றி நின்றபடி தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த பண்டிகையில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு கோவிலுக்கு சென்றனர். இதை அடுத்து தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இளவட்ட கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 70 கிலோ எடை கொண்ட கல் மீது வெண்ணெய் பூசப்பட்டு இருந்தது. இந்த கல்லை தோடர் இன இளைஞர்கள் தூக்கி, அதனை தோளில் வைத்து முதுகுக்கு பின்புறமாக கீழே போட்டு அசத்தினார்கள். வாலிபர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இளவட்ட கல்லை தூக்கினர். இதுகுறித்து தோடர் இன மக்கள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மொர்பர்த் பண்டிகையை கொண்டாடினோம். இந்த பண்டிகையில் உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நல்ல மழை பெய்து விளைச்சல் அதிகமாக வேண்டும். எங்களது வளர்ப்பு எருமைகள் நன்றாக இருக்க வேண்டும். கொரோனா நோயில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று வழிபட்டோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com