இன்று மகாளய அமாவாசை: தாமிரபரணியில் புனித நீராட தடை - பாபநாசம் படித்துறை வெறிச்சோடியது

மகாளய அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், பாபநாசம் படித்துறை வெறிச்சோடியது.
இன்று மகாளய அமாவாசை: தாமிரபரணியில் புனித நீராட தடை - பாபநாசம் படித்துறை வெறிச்சோடியது
Published on

விக்கிரமசிங்கபுரம்,

மகாளய அமாவாசை நாளில் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் மக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். பின்னர் பாபநாச சுவாமியை வழிபடுவார்கள். இதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். அப்போது பாபநாசம் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்று (வியாழக்கிழமை) மகாளய அமாவாசை ஆகும்.

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும்பொருட்டு, மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடுவதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அதன்படி நேற்று வெளியூர்களில் இருந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் பலரை போலீசார் திருப்பி அனுப்பினர். பாபநாசம் கோவிலுக்கு மட்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் முன்பாக விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, ஆற்றுப்படித்துறைக்கு பொதுமக்கள் செல்ல முடியாத வண்ணம் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், கோவில் அருகே நின்று ஆற்றுப்படித்துறையை மட்டும் பார்த்தபடி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடந்த ஒரு வார காலமாக பாபநாசத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் நேற்று கோவில் ஆற்றுப்படித்துறை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com