இன்று உப்பு சத்தியாகிரக நினைவு தினம்: வேதாரண்யத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்

இன்று (செவ்வாய்க் கிழமை) உப்பு சத்தியாகிரக நினைவு தினத்தை முன்னிட்டு வேதாரண்யத்தில் நேற்று சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இன்று உப்பு சத்தியாகிரக நினைவு தினம்: வேதாரண்யத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 1930-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உப்பு சத்தியாகிரகம் நடந்தது. இதில் ராஜாஜி, சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் உப்பு அள்ளி கைது ஆனார்கள். அவர்கள் உப்பு அள்ளிய இடத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் 30-ந் தேதி உப்பு சத்தியாகிரக நினைவு தின உப்பு அள்ளும் நிகழ்ச்சியும், உப்பு சத்தியாகிரக நினைவு தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பாதயாத்திரை திருச்சியில் தொடங்கி வேதாரண்யத்தில் நிறைவடைந்தது. உப்பு சத்தியாகிரக நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு நேற்று வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

சுதந்திர போராட்ட வரலாற்றையும், போராட்டத்தில் ரத்தம் சிந்தியவர்களின் தியாகத்தையும் இளம் தலைமுறையினர் உணர்ந்து கொள்வதற்காக இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டதாக தியாகிகள் தெரிவித்தனர். இதில் உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை கமிட்டியை சேர்ந்த சக்திசெல்வகணபதி தலைமை தாங்கினார்.

உண்ணாவிரதத்தை சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதரத்தினத்தின்பேரன் வேதரத்தினம், முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர். இன்று (செவ்வாய்க் கிழமை) அகஸ்தியன்பள்ளியில் உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஊர்வலம் உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் இருந்து புறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com