தக்காளி, பழ விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி

கர்நாடகத்தில் தக்காளி, பழ விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.
தக்காளி, பழ விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு உதவி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். அதே போல் அவர், பழங்கள், தக்காளி விளைவிக்கும் விவசாயிகளுக்கும் சிறப்பு உதவி தொகுப்பு திட்டத்தை எடியூரப்பா அறிவிக்க உள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகளுக்கு உதவி திட்டத்தை எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்த கொரோனா நெருக்கடி நேரத்தில் வாழ்க்கையை தற்காத்து கொள்வது மிக முக்கியமாக உள்ளது. இந்த கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகு நமது வாழ்க்கையை கட்டமைத்து கொள்வது அவசியம். இந்த கொரோனா ஒட்டுமொத்த உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதில் நாம் நம்மை பாதுகாத்து, வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

8 வழக்குகள் பதிவு

தரமற்ற விதைகளை விற்பனை செய்த நிறுவனங்களை கண்டறிந்து அதை பகிரங்கப்படுத்தினோம். இந்த தரமற்ற விதைகள் ஆந்திராவில் இருந்து வருவதை கண்டறிந்துள்ளோம். ஆந்திராவில் நிராகரிக்கப்பட்ட விதைகள் இங்கு விற்பனை செய்யப்பட்டது. சோளம், பருத்தி, சூரியகாந்தி போன்ற பயிர்களுக்கு தேவையான விதைகள் விற்கப்பட்டன.

தரமற்ற விதைகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவுவதற்கு என்றே விவசாய போர் அலுவலகத்தை திறந்தோம். இதுபற்றி தேசிய அளவில் பேசப்பட்டது. விவசாயிகளின் பிரச்சினைகள் இந்த அலுவலகம் மூலம் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆலங்கட்டி மழை

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு விவசாய பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. ராய்ச்சூர், கொப்பல் பகுதிகளில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. சேதங்களை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் அந்த விவசாயிகளுக்கு ரூ.45 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக எங்கள் அரசு எப்போதும் உள்ளது. அதனால் விவசாயிகள் பயப்பட தேவை இல்லை.

இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com