தேனியில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு

தேனியில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.102 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனியில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
Published on

தேனி,

தமிழக அரசு சார்பில், தேனி அருகே உள்ள போடி விலக்கு பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த 5-ந்தேதி நடப்பதாக இருந்தது. சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டதால், 9-ந்தேதிக்கு விழா ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், அரசு நலத்திட்டங்களை வழங்கி பேசுகிறார். இந்த விழாவில் சுமார் 32 ஆயிரம் பயனாளிகளுக்கு சுமார் ரூ.102 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நடந்து முடிந்த வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விழாவுக்காக போடி விலக்கு பகுதியில் பந்தல், மேடை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 35 ஆயிரம் பேர் அமரும் வகையில் மேடையுடன் கூடிய பிரமாண்ட பந்தலும், அதையொட்டி மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் பந்தலும் அமைக்கப்பட்டு உள்ளது. விழா மேடைக்கு முக்கிய பிரமுகர்கள் செல்வதற்கு தனி பாதை அமைக்கப்பட்டு உள்ளது. விழா நடக்கும் இடத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் சாதனை விளக்க கண்காட்சி நடக்கிறது. இதற்காக 19 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மக்கள் வரும் வாகனங்கள் நிறுத்தவும், முக்கிய பிரமுகர்கள் வரும் வாகனங்கள் நிறுத்தவும் தனித்தனி வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விழாவை முன்னிட்டு தேனி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. விழா நடக்கும் இடத்திலும் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், கம்பம் சாலை, மதுரை சாலையில் பிரமாண்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

விழா நடக்கும் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தீயணைப்பு வாகனங்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. விழா மேடை, பயனாளிகள் அமரும் பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டும், மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தினர்.

விழா ஏற்பாடுகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com