நாளை மறுநாள் முதல் லாரிகள் வேலைநிறுத்தம்: ரெயில்கள் மூலம் சரக்குகளை அனுப்ப நடவடிக்கை

நாளை மறுநாள் முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்குவதையொட்டி, ரெயில்கள் மூலம் அனைத்துவிதமான சரக்குகளையும் அனுப்பிக் கொள்ளலாம் என்று சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்து உள்ளது.
நாளை மறுநாள் முதல் லாரிகள் வேலைநிறுத்தம்: ரெயில்கள் மூலம் சரக்குகளை அனுப்ப நடவடிக்கை
Published on

கோவை,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- லாரி உரிமையாளர்கள் வருகிற 20-ந்தேதி முதல் (நாளை மறுநாள்) வேலைநிறுத்தம் செய்ய உள்ளதை தொடர்ந்து, சரக்குகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப உள்ள வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் சேலம் ரெயில்வே கோட்டத்தின் பார்சல் அனுப்பும் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயிலில் பார்சல் பதிவு சேவை நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சேலம் கோட்டத்திற்குட்பட்ட 32 ரெயில் நிலையங்களில் ரெயில்வே பார்சல் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் கோவை, மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் அடங்கும்.

எனவே, ரெயில் நிலையங்களில் உள்ள பார்சல் அலுவலகங்களை அணுகி வாடிக்கையாளர்கள் தங்களது சரக்குகளை வேண்டிய இடத்திற்கு அனுப்பலாம்.

மேலும் பார்சல்களை அனுப்பும் சேவையில் வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. வாடிக்கையாளர்களின் பார்சல்கள் சரக்கு பெட்டி உள்ளிட்டவைகளில் குறுகிய மற்றும் நீண்ட தொலைவு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் 23 டன் எடை உள்ள சரக்குகளை அனுப்ப ரெயில் நிலையங்களில் உள்ள பார்சல் அலுவலகங்களை அணுகலாம். பார்சல்களுக்காக மட்டும் இயக்கப்படும் சரக்கு ரெயில்கள் மூலம் 468 டன் எடை உள்ள சரக்குகளை வாடிக்கையாளர்கள் அனுப்பலாம்.

சேலம் கோட்டத்தில் 2017-18 நிதியாண்டில் மட்டும் 5,520.13 டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த 2017-ம் ஆண்டைவிட 8.83 சதவீதம் அதிகமாகும். 2017-ம் ஆண்டில் 5072.10 டன் சரக்குகள் கையாளப்பட்டது. இதன் மூலம் ரூ.18.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் ரூ.17.20 கோடியாக சரக்கு வருவாய் இருந்தது.

சேலம் கோட்டம் சார்பில் திருப்பூர்-அவுரா இடையே மட்டும் தனி சரக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் திருப்பூரில் இருந்து ஜவுளி உற்பத்தி பொருள்கள் 468 டன் சரக்குகள் சரக்கு ரெயில் மூலம் எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இதுதவிர கரூர்-ஜசித் (ஜார்கண்ட்) இடையே 2 சிறப்பு சரக்கு ரெயில்கள் மூலம் 960 டன் கொசு வலை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெயில் பார்சல் பதிவு மையங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் கால்நடைகள், இருசக்கர வாகனங்களை அனுப்பி வைக்கலாம். எனவே ரெயில் நிலையங்களில் உள்ள பார்சல் மையங்களை வர்த்தகர்கள், வர்த்தக அமைப்பினர், வாடிக்கையாளர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com