

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கவுரிசங்கர் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பா.விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஓட்டல்கள் அடைப்பு
கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தில் சாதாரண உணவகங்கள மீதான வரி பலமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள், சுற்றுலா பயணிகள் தங்கள் அன்றாட உணவுத் தேவைக்காக சாதாரண உணவகங்களுக்கே செல்கின்றனர். மாநில அரசு அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய உணவகங்களின் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைவாக நிர்ணயித்தது. ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி அதிக அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆண்டு விற்பனை ரூ.50 லட்சத்துக்கு குறைவாக உள்ள சிறிய உணவகங்களுக்கு தற்போது சதவீதம் முதல் சதவீதம் வரை இணக்கவரி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரியில் 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆண்டு விற்பனை ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ள சாதாரண ஓட்டல்களுக்கு தற்போது 2 சதவீதம் மதிப்புகூட்டு வரி வசூலிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரியில் 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏ.சி. வசதி உள்ள சாதாரண ஓட்டல்களில் தற்போது மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி 2 சதவீதம், மத்திய அரசின் சேவை வரி 6 சதவீதம் ஆக மொத்தம் 8 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரியில் 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த வரி உயர்வால் நடுத்தர, அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதனால் சாதாரண உணவகங்களின் மீதான பொருட்கள் மற்றும் சேவை வரியை குறைவாக நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனாலும் வரிவிகிதம் பலமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சாலையோர ஓட்டல் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை அனைத்து ஓட்டல்களையும் மூடும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.