ஏலகிரிமலையில் ரூ.3½ கோடி மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ராமன் தகவல்

ஏலகிரி மலையில் ரூ.3 கோடியே 65 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
ஏலகிரிமலையில் ரூ.3½ கோடி மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ராமன் தகவல்
Published on

வேலூர்,

வேலூர் ஊரீசு கல்லூரியில் உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உலக சுற்றுலா அமைப்பு 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1980-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 28-ந் தேதியை சுற்றுலா தினமாக சுற்றுலாத்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் சிப்பாய் கலகம் என்ற முதல் சுதந்திர போர் வேலூர் கோட்டையில் சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இலங்கையின் கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜசிங்கன் கல்லறை பாலாற்றங்கரையில் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டை, தங்கக்கோவில், அரசு அருங்காட்சியகம், ஏலகிரிமலை, ஜலகண்டேஸ்வரர் கோவில், வள்ளிமலை, ரத்தினகிரி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள், அமிர்தி உயிரியல் பூங்கா, ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி போன்றவை சுற்றுலாத் தளங்களாக உள்ளன.

ஏலகிரிமலையில் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.3 கோடியே 65 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலும், தெள்ளுர் சாலை ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் ரூ.35 லட்சம் மதிப்பிலும், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், ஆண்டியப்பனூர் அணை ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகில் நான்காவது தொழிற்புரட்சி என்பது டிஜிட்டல் மாற்றமாகும். இந்த மாற்றத்தை முதலில் நடைமுறைபடுத்தியது சுற்றுலா தான் என்று அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு பண பரிவர்த்தனைகள் எவ்வாறு? மேற்கொள்வது குறித்தும், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜான் பிரிட்டோ, முதல்வர் (பொறுப்பு) ஜெயசெல்வதாஸ், துணை முதல்வர் நவீன்பிலிப்தேவகுமார், கல்லூரி நிதியாளுனர் மணிவண்ணப்பாண்டியன், பாரத வங்கி மேலாளர் பாலமுரளி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com